search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கு தொடர்ச்சி மலையில் மழை"

    மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நம்பியாறு அணை நிரம்பியது. தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து 4-வது நாளாகவும் வெள்ளம் செல்கிறது. #Thamirabaraniriver
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள 11 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக அடவி நயினார் அணை பகுதியில் 45 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு பகுதியில் 28 மில்லி மீட்டர் மழையும், நகர் புறமான செங்கோட்டையில் 19 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

    பாபநாசம் அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பெய்தது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 665 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 141.65 அடியாக உள்ளது. அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பை கருதி கால்வாய்கள் மூலம் வினாடிக்கு ஆயிரத்து 20 கன அடியும், கீழ் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 460 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று காலை 147.64 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 156 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 55 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. மேலும் கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் முழு கொள்ளவையும் அடைந்து நிரம்பி வழிகிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாறு அணைக்கும், வடக்கு பச்சையாறு அணைக்கும் தண்ணீர் குறைந்த அளவே வந்ததால் அந்த அணைகள் நிரம்பாமல் இருந்தது. நேற்று முன்தினம் பெய்த கனமழையில் நம்பியாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நம்பியாறு அணைக்கு தண்ணீர் வேகமாக வரத்தொடங்கியது. இன்று அணையின் நீர்மட்டம் 20.6 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 22 அடியாகும். சிறிய அணை என்பதால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணைக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 14 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 15 அடியாக உயர்ந்துள்ளது.

    இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு அணைகளை தவிர மற்ற 9 அணைகளும் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    தொடர் மழை காரணமாக அணைகளில் இருந்து தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படுவதாலும், மழையினால் காட்டாற்று வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் வந்து சேர்வதாலும், தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி முதல் 10 ஆயிரம் கனஅடி வரை செல்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து 4-வது நாளாகவும் வெள்ளம் செல்கிறது.

    அகஸ்தியர் அருவியில் 4-வது நாட்களாக யாரும் குளிக்க அனுமதிக்கப்பட வில்லை. பாபநாசம் தலையணை பகுதியிலும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    நெல்லை குறுக்குத்துறை முருகன்கோவில், தைப்பூச மண்டபம் ஆகியவைகள் தொடர்ந்து தண்ணீரில் மூழ்கியபடி உள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளார்கள். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி சுமார் 8 ஆயிரம் கன அடி நீர் கடலுக்கு செல்கிறது. ஆனாலும் பல்வேறு கால்வாய்களில் இருந்து விவசாயத்திற்கு செல்லும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லவில்லை என்று விவசாயிகள் கூறி வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த ஒரு நாள் மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    அடவிநயினார்-45, குண்டாறு-28, செங்கோட்டை-19, கடனாநதி-6, பாபநாசம்-4, சிவகிரி-3, ராதாபுரம்-3, சேர்வலாறு-2, தென்காசி-2, கருப்பாநதி-1.5, ராமநதி-1

    இந்த நிலையில் இன்று பகலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் சாரல் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் அணைகளுக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. #Thamirabaraniriver



    மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது மீண்டும் சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை கடந்து 103 அடியாகி உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக ஓய்ந்திருந்த தென்மேற்கு பருவ மழை மீண்டும் நேற்று முன்தினம் முதல் பெய்து வருகிறது. நேற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்ச மாக 58 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குண்டாறு அணை பகுதியில் 43 மில்லி மீட்டரும், நகர் புறத்தில் செங்கோட்டையில் அதிகபட்சமாக 28 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2392 கன அடி தண்ணீர் இன்று காலை வந்து கொண்டு இருக்கிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று 92.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 97.70 அடியாக இருந்தது. இது ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று 103.02 அடியாக உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை கடந்து 116 அடி வரை சென்றது. மீண்டும் நீர்மட்டம் 63 அடி வரை குறைக்கப்பட்டது.

    தற்போது மீண்டும் சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை கடந்து 103 அடியாகி உள்ளது. மணிமுத்தாறு அணை பகுதியில் இன்று காலை வரை 2.4 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 388 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று 80.50 அடியாக உள்ளது.

    கடனாநதியின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 71 அடியாகவும், ராமநதியின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 69 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 112.75 அடியாக உள்ளது.



    ×